Sunday, April 24, 2016

            அன்று 28th Feb, 1992 ஆம் ஆண்டு , இரவு 9 மணி.

" டேய், மறந்துடாதே, தயவுசெய்து என்னை நீ தான் எழுப்பி விடனும், உன்னை தான் நம்பி இருக்கேன், ப்ளீஸ்" என்று தங்கை கிட்ட கெஞ்சி, கொஞ்சி சொல்லி படுக்க போன மணிக்கு சத்தியமா தூக்கமே வரல. புரண்டு புரண்டு படுத்து பத்து தரம் மணி பார்த்து தூங்க எவ்வவளவோ முயற்சி செய்தும், ஏனோ புதுசா கிடச்ச காதலியை டிஸ்கோ விற்கு வர சொல்லி கெஞ்சினால் மிஞ்சுவாளே அது போல தூக்கமும் வர மறுத்துக் கொள்ள, இன்னும் நான்கு மணி நேரம் எப்படி தான் தள்ள போகிறோமோ , நாளை என்ன ஆகுமோ, எல்லாம் இனிதே நடக்குமா என்ற எண்ணம் அச்சமாக மாறி பயமுறுத்த கண் இமைக்காமல் படுத்திருந்தான் மணி

காலை சூரிய உதயத்திற்கு முன்பே என்ன நடக்கும் என்று ஓர் அளவுக்கு தெரிந்து விடும்-னு நினைக்கும் போது வயிறு கலக்கியது., இது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள். முந்தைய நாள் மாலை பொழுதில், என்றைக்குமே கோவில்க்கு போகாத அவன், தெரு முனையில் இருந்த பிள்ளையார-க்கு 108 தோப்புக்கரணம், 108 தேங்காய் விடலை எல்லாம் பிரார்த்தனை செய்துவிட்டு, வீட்டுக்கு அமைதியாக வந்து, வயிறு பிசைய, புத்தகத்தை புரட்ட, நெற்றி முழுவதும் திருநீற்றை பார்த்த அம்மாவுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம், " ஆண்டவா, இந்த நாள் வந்தா தான் என் பிள்ளை உன்னை நம்புவான்- னா, தினமும் இது ஏன் நடக்க கூடாது " என்று அம்மா பிரார்த்திக்க ....மணி எதுவும் செய்வது அறியாது புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தான்.

மணி-யின் ஆருயிர் நண்பன் சங்கர். இந்த மாதிரியான எல்லா நாட்களிலும் மணி-யின் வீட்டிற்க்கு தவறாமல் வந்து விடுவான். அவனுக்கு எல்லாத்திலையும் அவ நம்பிக்கை , எதுவுமே சரியா நடக்காது-ன்னு பேசிகிட்டே இருக்கறது-ல அவன விட்டா வேற ஆளே கிடையாது.." நீ வேணும்னா பாரேன் எல்லாமே அஞ்சே நிமிஷத்துல முடிஞ்சிரும் நம்ம தான் உக்காந்துட்டு இவளோ டென்ஷன் படறோம் " என்று பேசறதே அவன் வேலை. என்ன தான் அப்படி சொன்னாலும் எனக்கு நல்லா தெரியும் அவன் அவன் வீட்டு பக்கத்துல இருக்கற கோவில்ல 1008- தேங்காய் விடலை கூட சொல்லிட்டு வந்திருப்பான் -அப்படின்னு.

இதுக்கு நடூல எங்க தாத்தா "டேய், என்னடா நல்லா வேண்டிட்டு வந்தியா, இனிமே அந்த ஆண்டவன் தான் காப்பாத்தனும் -னு சொல்லிட்டு என்னையும் எழுப்பிடு செல்லம் என்று மணி தங்கை கிட்ட சொல்ல , அவளுக்கு என்ன நடக்குது-னு சத்தியமா புரியல.

1st March, 1992, Sunday: மணி 4 ஆக, நான் எழுந்து கடிகாரம் அடிக்கும் முன்பே எழ, எழுந்தவுடன் இறைவனை வேண்டி, எழுந்து ஓடி, பல் துலக்கி, குளித்து, கும்பிட்டு, திருநீர் அணிந்து, நான் பட படத்து ஓட, ஓடும் வழியில் தாத்தா வழி மறித்து " டேய், அந்த transistor-ஐ கொஞ்சம் tune பண்ணி கொடுத்துட்டு போடா"-னு கெஞ்ச, tune பண்ணிட்டு, பக்கத்துல இருக்கற john வீட்டுக்கு ஓடி நான் நுழைய, அவனோட தாத்தா கம்பீரமா chair - ல ஜப மாலையோட உட்கார்ந்து,TV முன்னாடி உட்கார்ந்து இருக்க, அவன் வீட்டில் எல்லோரும், என் உற்றார், உறவினர், நண்பர்கள் -னு முழு வீடும் நிரம்பி வழிய, உட்கார இடமே இல்லாமல், அவர் வீட்டு தூணோடு தூணாக நான் நரசிம்ஹா அவதாரமாக மாறி உட்கார்ந்து, Borderஉம், Azhar-உம் toss போட வெளியில் வர. Tendulkar Century அடிக்கணும்டா சாமி-னு எல்லோரும் இறை கூவ ...பார்க்க ஆரம்பித்த அந்த Tendulkar -க்கு பிறந்த நாளாம்.

கடவுள், கடவுள்-னு நாங்க கூப்பிட்ட குரலுக்கு அந்த கடவுளே நீயாக வந்து எங்கள் தேசத்தை காத்த கடவுளின் 11 வது அவதாரமே உனக்கு " என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"

                                       இப்படிக்கு,

                                    மணியும் நானும்

Monday, February 15, 2016

அயல்நாட்டு வாழ்க்கையில் பெற்றது அதிகமா அல்லது இழந்தது அதிகமா?

மணியின் வாழ்க்கை 

 " ஹலோ மணி, உன்னால் கொஞ்சம் வர முடியுமா?" என்று வந்த அந்த தொலைபேசி அழைப்பு மணியை ரொம்பவே பாதித்து இருந்தது. அழகான கொண்டாட்டத்தை முடித்து விட்டு அந்த அற்புதமான இரவை நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்த போது அந்த தொலைபேசி அழைப்பை முற்றிலும் எதிர்பார்க்கவே இல்லை தான்.

அற்புதமான இரவு எவ்வளவு மாறிப்போய் இருந்தது.. " உடனே வரேன்... அது வரை காத்திருங்க" என்று கூறி கொண்டே அவனுடைய அழகான வீட்டில் நுழைந்து,மின்சார பொத்தானை அழுத்த வீடு உயிர் பெற்று எழுந்தது..படுக்கை அறைக்கு செல்ல மின் தூக்கியில் கால் வைக்கும் போதே அவனது விழிகளில் சிறுதுளி ஈரம் எட்டி பார்த்து இருந்தது.. அழகான மனைவி அன்புக்குழந்தை இருவரும் அணைத்துக்கொண்டு அந்த குளிருக்கு இதமாக உறங்கிக்கொண்டிருப்பதை பார்த்து, அவர்களை தொந்தரவு செய்யாமல் மடிக்கணினியை இயக்கி செல்வதற்கான ஆயத்தங்களை செய்ய ஆரம்பித்தான் மணி..

என்ன அற்புதமான வாழ்க்கை, ஒரு பொழுதில் இப்போது இரண்டு லட்சங்களை அனாயசமாக செலவு செய்து அவனால் பயண சீட்டு எடுக்க முடிந்திருந்தது. கடைசி பத்து வருட வாழ்க்கை அவனுடைய.அந்தஸ்தை பெரிதும் உயர்த்தி இருந்தது. இந்த செலவெல்லாம் ஒரு பொருட்டா என்று எண்ணிக்கொண்டிருந்த போது தான் அவனுக்கு அந்த ஞாபகம் எட்டி பார்த்தது..வாரத்திற்கு இரு முறையாவது கட்டாயமாக ஒரு ஐந்து நிமிட தொலைபேசி உரையாடல் வீட்டில் பேசாவிட்டால் அவனுக்கு நிம்மதியே இருக்காது. அன்று காலையில் தான் பேசியிருந்தான் அவனுடைய பெற்றோர்க்கு.. தந்தை மறுமுனையில் " என்னப்பா எப்படி இருக்க" என்று கேட்க ஆரம்பிக்க 5 நிமிடம் மட்டுமே இருக்க, சீக்கிரம் பேசி முடிக்க வேண்டிய கட்டாயம் மணிக்கு .. "சீக்கிரம்பா, அம்மாகிட்ட கொடு .. நான் எல்லாம் நல்லா தான் இருக்கேன்" என்று சொல்ல அப்பாவோ " இல்ல மணி, நான் நேத்து டாக்டர் கிட்ட போயிட்டு வந்தேன்பா, டாக்டர் ஏதோ புதுசா மாத்திரை வந்திருக்குன்னு சொன்னார்.. ஆனா ஒவ்வொரு மாத்திரையும் 500 ரூபாயாம்பா, வாங்கிக்கட்டுமா" என கேட்டவரிடம், இதெல்லாம் சும்மா டாக்டர் சொல்றதுப்பா" " தேவையின்னா வாங்கிக்கோ, தேவையான்னு பார்த்துக்கோ" இன்னொரு டாக்டர் கிட்ட தேவையான்னு விசாரிச்சுட்டு பண்ணு" என்று சொல்லி நேரமாகிவிடவே, " அம்மாகிட்ட அப்புறோம பேசறேன்" என்று சொல்லி விட்டு மணி அழைப்பை துண்டித்து விட்டு தனது நீல நிற BMW 720 ஐ தொடக்கி நியுயார்க் நகர சாலையில் சொகுசாக இளையராஜா இசையுடன் விரைந்தது நினைவுக்கு வந்தது.

இப்பொழுது 2 லட்சம் ஒரு எண்ணம் இல்லாமல் ஒரு நொடியில் செலவு செய்து விட்டு , கீழ் இறங்கி வந்து தூங்கும் தன மனைவியை மெதுவாக எழுப்பி தொலைபேசி அழைப்பு விவரத்தை தகவல் சொல்லிவிட்டு தன சென்று 5 நாட்களில் திரும்புவதாக கூறிவிட்டு, தானும் வருவதாக எத்தனித்த மனைவியிடம் குழந்தையிடம் பள்ளிக்கூடம் பற்றி கூறி இருக்க சொல்லிவிட்டு தன்னுடைய படகுக்காரில் பயணம் செய்ய வெளியே வர முகத்தில் பனி அறைந்தது .

பனி அறைய, காரை தொடக்க, இளையராஜா நித்திரையில் இருந்து எழ, பாதையில் விரைந்த போது, ஏனோ எட்டிப்பார்த்த அந்த நீர்த்துளி, கண்ணில் இருந்து கன்னத்தில் முத்தமிட்டுகொண்டு இருந்தது.

விமான நிலையம் நுழைந்த பின், அந்த அழகு தேவதை மணிக்கு பயணச்சீட்டை நீட்ட, எதையும் சட்டை செய்யாமல் விமானத்திற்கு உள்ளே சென்று அமர விமானி" இன்னும் 19 மணி நேரத்தில் நாம் சென்னையை அடைவோம்" என்று கூறும் பொழுதே அந்த தொலைபேசி அழைப்பு வந்து 5 மணி நேரம் ஆகிவிட்டு இருந்தது. 2 மணி நேரத்திற்கு ஒரு முறை தாகம் தணிக்க, 4 மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பாடு என கவனித்துக்கொண்ட அந்த விமான பணிப்பெண் ஏனோ அவனுக்கு தன் அம்மாவை நினைவு படுத்த ...இவ்வளவு நேரம், கன்னத்தில் முத்தமிட்ட அந்த கண்ணீர் ... மல்க வழிந்து, அடக்க தெரியாத அழுகையாக மாறிவிட்டிருந்தது..

19 மணி நேரம் 19 யுகங்களாக கடந்து பரிதவித்து...சென்னையை விமானம் தொட, ஏனோ அன்னையை தொட்ட ஸ்பரிசம் கிடைக்க, அழுகை மேலோங்க, தன பணத்தையும் கவுரத்தையும் மறந்து, அழுது ஓட, எல்லோரும் வேறு விதமாக அவனைப்பார்க்கவும், கண்டு கொள்ளாமல் அவன் ஓடுவது அவனுக்கு புதுமையாகத்தான் இருந்தது.

வெளியே வர, தன் மாமா தன்னை அழைக்க வந்திருப்பதை பார்த்தும் தான் தெரிந்தது ,. அவன் சென்னை வந்து 5 வருட காலம் ஓடி விட்டது என்று ..எதுவும் பேசாமல் வண்டியில் ஏறிக்கொள்ள.. மாமாவின் தோளில் சாய்ந்ததும், காய்ந்த அந்த கண்ணீர் மீண்டும் ஒரு முறை எட்டி பார்க்க. தான் எதிர் கொள்ள போவதை எப்படி கடக்க போகிறோம் என்ற துக்கம்மும்,பயமும்,பாவ உணர்ச்சியும் மேலோங்க, கண்களை இறுக மூடிக்கொண்டான்.

தன் வீட்டில் இறங்கியதும், உள்ளே ஓடி வீட்டின் கூடத்தில், வாய் கட்டி விரல் கட்டி புன்னகையுடன் தரையில் கிடத்தப்பட்டிருந்த அம்மாவிடம் அவன் 2 நிமிடம் பேச முடியுமானால் ....

மணி மட்டுமல்ல, நாங்கள் எல்லாரும் வெளிநாட்டில் பெற்றது அதிகமே !!